கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் சிகிச்சை பெறும் அவலம்..!

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் பற்றாக்குறையால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் சிகிச்சை பெறும் அவலம் .;

Update: 2021-05-04 08:45 GMT

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா தீவிரம் அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலம் அரசு மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கானோர் கொரோனாவுக்கு கிச்சைக்காக ஒரே சமயத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனை பொறுத்தமட்டில் தற்போது 600 படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உதவியோடு உள்ளது. இந்த நிலையில் அனைத்து படுக்கை வசதிகளும் நிரம்பி விட்டதால் தற்போது வரும் புதிய நோயாளிகளுக்கு அங்கு இடம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே ஆக்சிஜன் தேவைப்படுபவர்களாக இருப்பதால் அனைவருக்கும் படுக்கை வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக வந்தவர்கள் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பி விட்டதால் தற்போது மாற்று வழிக்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சிகிச்சைக்கு வந்தவர்களில் ஒரு சிலர் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க அரசு மருத்துவமனை முழுவதும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News