மருத்துவமனைகளில் தொடரும் தீ விபத்து: சேலத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தம்
வட மாநிலங்களில் தீ விபத்தால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் வட மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, வட மாநிலங்களில் சில மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டு, அதன் காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வரும் சோக நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என தீயணைப்பு துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதையடுத்து, கொரோனா நோயாளிகள் அதிகமாக உள்ள மருத்துவமனைகளில் தீயணைப்பு வாகனங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் மருத்துவமனையின் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.