சேலத்தில் வீட்டில் பதுக்கிய 2174 மதுபாட்டில்கள் பறிமுதல்
சேலத்தில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 2174 மதுபாட்டில்கள், நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது.
சேலம் பள்ளப்பட்டி பெரமனூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவர் வீட்டில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்று வருவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பள்ளப்பட்டி போலீஸார் மாதேஷின் வீட்டிற்கு சென்று இரவு சோதனையிட்டனர்.
இதில் அவரது வீட்டில் 2174 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாதேஷ் மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சேலம் 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் மதுபாட்டில்கள் அனைத்தும் அழிக்கும் பணி நடைபெற்றது. நீதிமன்ற வளாகத்தில் குழி வெட்டப்பட்டு, அனைத்து மது பாட்டில்களும் திறந்து அந்த குழியில் மதுவை ஊற்றி காவல்துறையினர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அழித்தனர்.