இரட்டைப் படுகொலையை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்.

அரக்கோணத்தில் நடந்த இரட்டை படுகொலையை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-04-13 06:45 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோகனூரில் கடந்த 8ஆம் தேதி தலித் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொலை செய்தவர்கள் மற்றும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இதுவரை முழுவதுமாக கைது செய்யப்படவில்லை என்றும்,

அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும் கூறி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்புலிகள், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

இந்தப் படுகொலையில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் அவர்கள் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முறையாக வழக்கு நடத்தப்பட்டு கடும் தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென போராட்டத்தின் வாயிலாக வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்கு சேகரித்த காரணத்திற்காக இளைஞர் ஒருவரை வம்பு சண்டைக்கு இழுத்து அதன் மூலமாக மேலும் இரண்டு இளைஞர்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் வரவழைத்து அவர்கள் தலை மீது பாறாங்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.

20க்கும் மேற்பட்டவர்கள் திரட்டப்பட்டு திட்டமிட்டு இந்த கொலை நடந்திருக்கிறது. ஆனால் காவல்துறை முழுமையாக கைது செய்யாமல் இருக்கிறது. அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோடு அரசுப் பணி உள்ளிட்ட ஈடுசெய்யும் நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

Tags:    

Similar News