உர விலையை கட்டுப்படுத்தக்கோரி இந்திய கம்யூ., விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

உர விலையை கட்டுப்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-04-22 07:45 GMT

மத்திய அரசு இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு  உர விலையை அதிரடியாக 58 சதவீதம் உயர்த்தியது. இந்த விலை ஏற்றத்தால் இந்தியா முழுதும் உள்ள விவசாயிகள் அதிர்ச்சிக்கு ஆளாயினர்.

ஏற்கனவே உரம் ஒரு மூட்டை 1200  ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 1,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் உரம் வாங்கி நடவு பணியில் ஈடுபட முடியாத  சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விவசாய சங்கம் இணைந்து உர விலையை கட்டுப்படுத்தக்கோரி,  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில்  விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் கூறியதாவது: இந்தியா முழுவதும் திடீரென உர விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் தமிழக விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் . இந்த விலை ஏற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தாமல் மத்திய அரசுக்கு துணை நிற்கிறது.

ஏற்கனவே 1200 ரூபாய்க்கு விற்கப்பட்ட உரத்தின் விலை தற்போது  1,900 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் தமிழகம் முழுவதும்  பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் நடவு பணி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக   சேலம் மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில்  நெல் நடவு மற்றும் இதர விவசாய பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

உரவிலையை கட்டுப்படுத்தக் கோரி,3 நாட்களுக்கு தொடர்ந்து  சேலம் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அவர், உடனடியாக மத்திய மாநில அரசுகள் உர விலையை விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News