கருணை அடிப்படையில் வாரிசு பணி நியமனம்: சேலம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
சேலம் மாநகராட்சியில், கருணை அடிப்படையில் வாரிசு பணி நியமனம் சான்றிதழ் சரிபார்ப்பை ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கருணை அடிப்படையில் வாரிசு பணி நியமனம் செய்யக் கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், வாரிசு பணி வேண்டி, விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
இப்பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார். சேலம் மாநகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரி 288 நபர்கள் மனுக்கள் அளித்திருந்தனர். மனுதாரர்களின் வீட்டு முகவரிக்கு பதிவு தபால் மூலம் சான்றிதழ் சரிபார்க்கும் போது கொண்டு வரப்படவேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மனுதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் வகையில் நேற்று முதல் 4 நாட்களுக்கு தினந்தோறும் 80 நபர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சான்றிதழ்கள் சரிபார்க்கும் போது கல்வித் தகுதிச்சான்று, ஜாதி சான்று, இருப்பிடச்சான்று, இறந்த பணியாளர்களின் இறப்புச் சான்று, வாரிசுச் சான்று, இதர வாரிசுகளின் ஆட்சேபணையின்மை சான்று, பிறப்புச் சான்று, நன்னடத்தைச் சான்று, உறுதிமொழி சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஒருங்கிணைந்த சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப பணியிடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.