நீட் தேர்வுக்கு எதிரான மசோதா: திமுகவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
ரத்து செய்ய முடியாத நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றி திமுக நாடகமாடுவதாக சேலத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட்தேர்வு அச்சம் காரணமாக சேலத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திமுக அரசை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அரசியல் ஆதாயத்திற்காக திமுக நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதியை வழங்கி, மாணவர்களை வஞ்சிப்பதாக கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என்று தெரிந்தும் திமுக பொய் வாக்குறுதிகளை வழங்கி மாணவர்களை குழப்பி வருவதாக கூறிய சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர் முருகன், இன்றும் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றுவதாக கூறி தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். 100க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.