பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கேஸ் விலை கடுமையாக உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
குறிப்பாக மத்திய அரசு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை கடுமையாக உயர்த்தியதால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. உடனடியாக அவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆர்டிஓ அலுவலங்களில் எப்.சி போன்றவை அரசின் கீழ் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படும் வாகனங்களை அழிக்கப்படும் என்ற உத்தரவை திரும்பப் பெறவேண்டும்.
ஆன்லைன் என்ற பெயரில் உண்மையை கண்டறியாமல் அபராதம் போடுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.