சேலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் அதிகாரியை மிரட்டிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார். இவர் மீது சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடு, பண இரட்டிப்பு மோசடி தொடர்பாக அவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். கடந்த ஓராண்டிற்கு முன் சிவக்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.இதனிடையே சிவக்குமார் மீது சேலம் டவுன் போலீசில் கடந்த 2015 ம் ஆண்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கொடுத்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவக்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதன் பேரில் , சிவக்குமாரை சேலம் டவுன் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். நேற்று மாலை அவரை போலீசார் கைது செய்தனர். 5 ஆண்டுக்கு பின் அதிகாரியை மிரட்டிய வழக்கில் அவரை கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து சிவக்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன் முடிவு வந்தவுடன் சிறையில் அடைக்கவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.