சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஆத்தூர் அருகே புங்கவாடி பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கலைச்செல்வன் பணியாற்றும் தனியார் நிறுவனத்தின் மேலாளர்கள் கணேஷ் ,தமிழ்மணி மற்றும் உடன் பணியாற்றும் ஷெரிப் ஆகிய மூன்று நபர்கள் கலைச்செல்வனை அலுவலகத்துக்கு அழைத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, ஜாதி ரீதியாக திட்டியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கலைச்செல்வன் குடும்பத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.