சேலம் அரசு மருத்துவமனை எதிரே பச்சிளம் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய மூதாட்டி
சேலம் அரசு மருத்துவமனை எதிரே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய மூதாட்டி.;
சேலம் அரசு மருத்துவமனை எதிரே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய மூதாட்டி. குழந்தை இறந்த நிலையில் காவல்துறையினர் மீட்டு விசாரணை.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் குப்பை தொட்டியில் உள்ள பயனுள்ள பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் மீனா என்ற பெண் இன்று வழக்கம்போல குப்பைத் தொட்டியில் சோதனை இட்டுள்ளார். அப்போது பை ஒன்றில் ஏதோ பூனைக்குட்டி இருப்பது போன்று தெரியவந்ததையடுத்து அதனை சோதித்துப் பார்த்து உள்ளார் அப்போது பையில் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அருகில் ஓடிச்சென்று மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் விரைந்து வந்து குப்பை தொட்டியை சோதனையிட்டபோது குப்பைத்தொட்டியில் பை ஒன்றில் இறந்த நிலையில் பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் பிஞ்சு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து பையில் இருந்த குழந்தையின் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் விசாரணையை துவக்கியுள்ள நிலையில் அந்த சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போது மூதாட்டி ஒருவர் குழந்தையை பையில் எடுத்துக்கொண்டு வந்து குப்பைத்தொட்டியில் யாரும் பார்க்காத போது வீசிவிட்டு மீண்டும் அதே வழியில் சென்ற காட்சி பதிவாகி உள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மூதாட்டி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.