சேலத்தில் கனமழை காரணமாக வாகன நிறுத்துமிடத்தில் நான்கு கார்கள் மழைநீரில் மூழ்கின
சேலத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக தனியார் தங்கும் விடுதி வாகன நிறுத்துமிடத்தில் நான்கு கார்கள் மழைநீரில் மூழ்கின.
சேலம் மாவட்ட அளவில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஆணைமடுவு மற்றும், சேலம் மாநகர பகுதிகளில். சுமார் 10 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. சேலம் மாநகர பகுதிகளில் மூன்று மணி நேரத்துக்கு மேலாக கன மழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஓடியது.
குறிப்பாக புதிய பேருந்து நிலையம் எதிரே அத்வைத ஆஷ்ரம சாலை வெள்ளக்காடாக மாறியது. அதிகாலை நேரத்தில் சாலையில் வெள்ளம் வடிந்த நிலையில் தங்குவிடுதி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்கள் முழுமையாக நீரில் மூழ்கின. இதன் காரணமாக காரின் உரிமையாளர்கள் அவதிக்குள்ளாயினர். இதனையடுத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் வடிக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.