சேலம் மாநகராட்சி ஆணையாளர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றி முழு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் 2 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
முதல்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு 2வது கட்டமாகவும் விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரை தொடர்ந்து உதவி ஆணையர், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.