வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆயிரகணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமக மற்றும் வன்னியர் சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் ஐந்து கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் ஆறாவது கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்றைய தினம் பாமக சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. பாமக மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகர், ஓமலூர், எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பாமகவின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.