சேலத்தில் ஆசிரியைக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சேலம் பெரமனூர் பகுதியை சேர்ந்த ஆசிரியை சேலம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கொரொனா தொற்று காரணமாக கடந்த 9 மாதமாக மூடியிருந்த பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திறக்கப்பட்டன. மாணவிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியை ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் ஆசிரியைக்கு கொரொனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இதன் காரணமாக பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.