சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை: அசத்தும் இளைஞர்கள்

சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை. ஒட்டகப் பாலில் டீ, காபி, மில்க் ஷேக் போட்டுக் கொடுத்து அசத்தும் இளைஞர்கள்.;

Update: 2021-12-07 05:45 GMT

சேலத்தில் ஒட்டகப் பாலில் டீ, காபி, மில்க் ஷேக் போட்டுக் கொடுத்து அசத்தும் இளைஞர்கள் தருண் மற்றும் பிரபாகரன்.

சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை. ஒட்டகப் பாலில் டீ, காபி, மில்க் ஷேக் போட்டுக் கொடுத்து அசத்தும் இளைஞர்கள் 

நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றால் உலக நடப்புகளை நொடிக்குள் அறிந்துக் கொள்ளும் வசதி இந்த தலைமுறைக்கு தான் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் பொருட்கள் அரிதாக நமக்கு கிடைத்த காலங்கள் மாறி ஆர்டர் செய்த அடுத்த நாட்களில் கைகளில் கிடைக்கும் வகையில் போக்குவரத்திலும் தொழில்நுட்பம் பெருகிவிட்டது.

அதுபோல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசித்தவை நிஜத்தில் நடந்தால் என்னவாக இருக்கும் என்று நினைத்த காலங்கள் தற்போது நனவாகி வருவது வியக்கதகும் வகையில் உள்ளது. அந்த வகையில் ஒட்டகப் பால் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது "வெற்றிக் கொடி கட்டு" திரைப்படத்தில் வரும் வடிவேல் காமெடிதான். ஒட்டகப் பால் டீ வேணும்' என்று வடிவேலு பேசிய வசனங்களும், அதுதொடர்பான காமெடிக் காட்சிகளும் வெகு பிரபலம். இந்த நகைச்சுவைக் காட்சியை நிஜமாக்கும் வகையில் சேலத்தில் ஒட்டக பாலில் டீ, காபி வழங்கி அசத்தி வருகின்றனர் இரு இளைஞர்கள்.

சேலம் கோரிமேட்டில் இருந்து உயிரியல் பூங்காவுக்கு செல்லும் வழியில் 500 மீட்டர் தொலைவில் உள்ளது இந்த சைலம் ரெஸ்டாரண்ட். இந்த கடையில் தான் ஒட்டகப் பாலில் டீ, காபி, மில்க் ஷேக் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தருண் மற்றும் பிரபாகரன் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த சில ஆண்டுகளாக சேலம், கோவை, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஒட்டக பாலை வீடுகளுக்கு ஆர்டரின் பேரில்  விற்பனை செய்து வந்துள்ளனர். விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியதன் காரணமாக இதனை ஏன் மக்களின் பொது பயன்பாட்டுக்காக வைக்கக் கூடாது என்று எண்ணிய இந்த இளைஞர்கள், சுற்றுலாவுக்கு வரும் பயணிகளுக்கு ஏற்ற வகையில் இந்த ஒட்டகப்பால் டீ கடையை ஆரம்பித்துள்ளனர்.

சேலம் கோரிமேட்டில் இருந்து உயிரியல் பூங்காவுக்கு செல்லும் வழியில் உள்ளது இந்த சைலம் ரெஸ்டாரண்ட்.

ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் ஒட்டகப்பால் எட்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அவ்வப்போது புதிது புதிதாக வரும் ஒட்டகப் பாலை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தது போக டீ கடை வைத்து நடத்தி வருவதால் வியாபாரமும் நல்ல முறையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஒரு லிட்டர் ஒட்டகப்பால் 899 ரூபாய்க்கும் அரை லிட்டர் 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு டீ 60 ரூபாய்க்கும், காபி 65 ரூபாய்க்கும், மில்க் ஷேக் 140 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒட்டகப் பாலில் இருந்து தயாரிக்கும் மில்க் ஷேக் மிகவும் சுவையாகவும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை விளைவிக்கக்கூடிய சக்தி கொண்டதாகவும் ஒட்டகப்பால் விளங்குவதாக தெரிவிக்கின்றனர்.  தினந்தோறும் காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒட்டகப் பாலில் டீ சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேற்றி ஆரோக்கியத்துடனும் எதிர்ப்பு சக்தி மற்றும் இன்சுலின் அதிக அளவில் சுரப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த டீ ஏற்றதாக இருக்கிறது என்றும் இதனால் ஏராளமானோர் தங்கள் கடையை தேடி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் ஒட்டகப் பாலில் டீ சாப்பிட்டவர்கள் தங்கள் கடைக்கு வந்து ருசி பார்த்துவிட்டு அதே சுவை அதே மனம் என்று பாராட்டி செல்வதாகவும் தெரிவிக்கும் இவர்கள் இதனை விரிவாக்கம் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். சேலத்தில்  ஒட்டக பால் டீ வியாபாரம் தற்போது களை கட்ட தொடங்கியுள்ளது படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் ஒட்டகப்பால் டீ கடை விரிவு படுத்த போவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

 எது எப்படியோ நகைச்சுவையாகப் பேசிக் கொண்டது தற்போது நிஜமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.


Tags:    

Similar News