ஏரி ஓடையில் கழிவு நீரை கலந்த லாரி: அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலை மறியல்

ஏரி ஓடையில் கழிவு நீரை கலந்த லாரியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.;

Update: 2021-11-27 07:45 GMT

சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள அம்பாள் ஏரிக்கு மழைக்காலங்களில் அருகில் உள்ள ஊத்துமலையில் இருந்து வரக்கூடிய மழை நீரானது அப்பகுதியில் உள்ள ஓடை வழியாக அம்பாள் ஏரிக்கு வருவது வழக்கம். இந்த ஏரியை சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏரிக்கு வரக்கூடிய ஓடையில் மர்மநபர்கள் இரவு நேரங்களில் ஆலை கழிவுகளை லாரிகள் மூலம் ஓடையில் கலப்பதாக அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று இரவு கழிவுநீர் கலக்க வந்த லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் அன்னதானபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில்  காவல்துறை அதிகாரிகள் ஓட்டுனர் மற்றும் ஆலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பிறகு போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  கழிவுநீரை ஓடையில் கலக்கப்படுவதால் இப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றோம். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News