தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக 10,000 கோடி உடனே வழங்க வேல்முருகன் கோரிக்கை

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக மத்திய அரசு 10,000 கோடி நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-11-27 12:15 GMT

செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்  தலைமையில் தொண்டர்கள் இணைப்பு விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழக அரசு வேலைவாய்ப்பில் பூர்வகுடி தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க சட்டம் நிறைவேற்றி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திமுக அரசின் கடந்த ஆறு மாத கால ஆட்சி சிறப்பாக உள்ளது என்றும் பருவ மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக முதல்வர் நேரில் சென்று மழை வெள்ள பாதுகாப்பு பணியை சிறப்பாக செய்து வருவதாக பாராட்டினார்.

தமிழகத்தில் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 16 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு சென்றது. ஆனால் இதுவரை  நிவாரண தொகையை மத்திய அரசு வழங்காமல் உள்ளது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு பத்தாயிரம் கோடி நிதியை உடனே வழங்க  வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு மிக கடுமையான சட்டம் பலப்படுத்த வேண்டும். பிஞ்சு குழந்தைகளை கண்காணிப்பதற்கும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ,வழிகாட்டுதல், அறிவுரைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை ஈடுபடும் நபர்கள் மீது உச்சபட்ச தண்டனை கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து கடுமையாக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார்.

ஜெய்பீம் பட விவகாரம் குறித்துப் பேசிய வேல்முருகன், இதற்கு முன்பாக சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்களில் அந்த காட்சிகளை, வசனங்களை தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள் நீக்கியுள்ளனர். அந்த நடைமுறை ஆரோக்கியமானது.

நீட் தேர்வு ரத்து தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கு விடுவிக்க வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம் எங்களுக்கு உரிய இடங்களை திமுக ஒதுக்கீடு செய்யும். கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதேபோல் தொடர்ந்து செயல் பட வேண்டும். சந்தன வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வருக்கு கடிதமாக வழங்கியுள்ளதாகவும், அரசே ஏற்று மணிமண்டபம் கட்டினால் வரவேற்போம். இல்லாவிட்டால் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மணிமண்டபம் கட்டி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News