சேலம் அருகே டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு
சேலம் அருகே எருமாபாளையம் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் 5ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே எருமாபாளையம், சன்னியாசிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் ஜல்லி கற்கள் மற்றும் எம்சாண்ட் கிரசர்கள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை எருமாபாளையம் பகுதியில் எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் சென்ற டிப்பர் லாரி, அதே பகுதியைச் சேர்ந்த மணி - நந்தினி தம்பதியின் மகன் ஐந்தாம் வகுப்பு பயிலும் கார்த்திக் மீது மோதியது. இதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிச்சிப்பாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவனின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிரஷர் வாகனங்கள் குடியிருப்பு பகுதியில் அதிக வேகத்தில் செல்வதால் அவ்வப்போது இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், இது போல் உயிரிழப்புகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
லாரி மோதிய விபத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.