திமுக ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாகிறது: பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக மாறி வருவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவித்தாலும் தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் பாஜக தயாராக உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தராமல் தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்தி வருவதாகக் கூறிய அவர், வள்ளுவர் பிறந்த நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. பாரம்பரியம் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் நடைமுறையை மாற்றுவதற்காக மக்கள் யாரும் திமுகவிற்கு ஓட்டுப் போடவில்லை என சாடினார்.
தமிழகத்தில் இளைஞர்கள் தடம் மாறி போவதற்கு தமிழகம் போதை மாநிலமாக மாறி வருவதே காரணம் என்ற அவர் மாநிலத்தின் தலைநகரான சென்னையில் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அரசாங்கம் டாஸ்மாக் மூலம் மதுவை விற்பனை செய்வது போல ஆளும் கட்சி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்திற்குள்ளேயே தமிழகத்தை இவ்வளவுதான் சீரழிக்க முடியும் என்பதை திமுக அரசு காண்பித்துள்ளது. எனவே தமிழக முதல்வர் சிறப்பு படை அமைத்து தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தை தடுத்து இளைஞர்களை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.