சேலம் திமுகவின் கொடி கம்பத்தால் மாணவி மூக்கு உடைப்பு: அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு
சேலத்தில் திமுகவின் கொடி கம்பம் விழுந்து மாணவியின் மூக்கு தண்டு உடைந்தது; அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஏற்பாடு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி அரசு நிகழ்ச்சிக்காக சேலம் வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு, மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு, திமுக நிர்வாகிகளை சந்தித்து வரவேற்பு அளிப்பது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதனிடையே சேலம் மாநகரம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திப்பதற்கு வருகை தரும் அமைச்சரை வரவேற்க திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தாதகாப்பட்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன், தன்னுடைய 10 வயது மகள் பிரியதர்ஷினியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, திமுகவினர் கொடிகம்பியை நட முற்பட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மாணவி மீது விழுந்தது. இதனால் மாணவியின் மூக்கு தண்டு உடைந்தது.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிக்கு தண்டுவடம் பாதிக்கப்பட்டு உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.