மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி: சேலம் அணி சாதனை
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சேலம் அணி முதல் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.;
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 600 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.இதில் சேலம் மாவட்டத்திலிருந்து 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவில் சேலம் அணி முதலிடத்தையும், சீனியர் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. சப் ஜூனியர், ஜூனியர் பிரிவில் 33 தங்கம், 14 வெள்ளி, 4 வெண்கலம் என 51 பதக்கங்களையும், சீனியர் பிரிவில் 10 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 25 பதக்கங்களையும் பெற்று சாதனை பெற்றுள்ளது.
போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து தடகள வீரர்களுக்கும் பாராட்டு விழா சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் தலைவர் முருகானந்தம் மற்றும் செயலாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.