சேலத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான 32 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்
சேலத்தில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான 32 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். வெள்ளி கொலுசு தயாரிக்கும் வேலை செய்து வரும் இவர், இன்றைய தினம் 65 சதவீத வேலைப்பாடுகள் முடிக்கப்பட்ட 32 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுகள், அடுத்தகட்ட வேலைபாடுக்காக கொண்டலாம்பட்டி பகுதிக்கு எடுத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கொண்டலாம்பட்டி பகுதியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பறக்கும்படை வட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையிலான குழுவினர் வாகன தணிகை மேற்கொண்டு வந்தனர். அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஆனந்தராஜை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அவரிடம் இருந்த இரண்டு பைகளில் வெள்ளி கொலுசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கொலுசுகள் அனைத்தையும் பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் அதனை சூரமங்கலம் பகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.