வீடுகளை சூழ்ந்த கழிவுநீர்: சேலத்தில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
சேலத்தில் மழைநீர், சாக்கடை நீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.;
சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட தாதம்பட்டி, அண்ணா நகர், சக்தி நகர், பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் மழை நீர், சாக்கடை நீர் இரண்டும் கலந்து வீடுகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் சிரமப்பட்டு வந்தனர்.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை உடையாபட்டி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த அம்மாபேட்டை காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வீடுகளை சூழ்துள்ள நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியலில் இருந்து தற்காலிகமாக கைவிட்டனர்.
இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் தேங்கி நின்ற கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.