அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில் சேலம் மாவட்டம் முதலிடம்

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு.

Update: 2022-02-02 08:30 GMT

பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள்.

சேலம் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 75 மாணவ-மாணவியர் சேர்ந்துள்ளனர். குறிப்பாக தமிழக அளவில் இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அதிகமான மாணவர்கள் சேர்க்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவியர் 75 பேரை  சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், மருத்துவத் துறை தலைவர் சுரேஷ் கண்ணா, ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ஜெமினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

தொடர்ந்து மாணவ மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ மாணவியர் அனைவரும் சிதறல் இல்லாமல் மருத்துவத் துறையில் தடம் பதிக்க மாவட்ட நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளித்தார். உலகம் முழுவதும் கற்றல்-கற்பித்தல் தாய்மொழியில் உள்ள நிலையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் முன்பாக மன தைரியம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மொழி பற்றியோ சூழல் பற்றியோ தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது; தாய்மொழியில் சிந்திக்கும்போது அந்த சிந்தனை தெளிவாகும் பல மிக்கதாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஜலகண்டாபுரம் பண்ணப்பட்டி தாரமங்கலம் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர் அதிக அளவில் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கிராமப் பகுதி மாணவ மாணவியருக்கு எப்போதுமே விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அதிக அளவில் இருக்கும். எனவே வெளிநாட்டு ஆங்கிலம் பட்டணத்து பகட்டு ஆகியவை அனைத்தும் கானல்நீர் என்பதை உணர்ந்து தங்களின் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் பெற்றோர் எண்ணங்களை மருத்துவராகி பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த விழாவில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு வெள்ளை நிற கோட் மற்றும் ஸ்டெதஸ்கோப் ஆகியவற்றை வழங்கி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

Similar News