சேலம் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிப்பு
சேலத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தால் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக தொண்டர்கள் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் சேலம் நகரில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நான்கு ரோடு வரைக்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நின்றன. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.