சேலத்தில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை: சிசிடிவி காட்சி பரபரப்பு
சேலத்தில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் ஐந்து ரோடு சந்திப்பில் இருந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா செல்லும் பிரதான சாலையில் அழகாபுரம் காவல்நிலையம் அருகே ஒரே வளாகத்தில் அமைந்துள்ள 3 துணிக்கடைகளில் அடுத்தடுத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கடைகளில் இருந்த 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அழகாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்தும், சிசிடிவி காட்சி பதிவை கொண்டும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதேபோல் அழகாபுரம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள தனியார் மெடிக்கல் கடை ஒன்றில் ஷட்டர் உடைக்கப்பட்டு 24 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 6 லட்ச ரூபாய் தப்பியது. இச்சம்பவம் குறித்தும் அழகாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாநகரில் காவல் நிலையம் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.