சேலம் அருகே பழிக்கு பழியாக இளைஞர் வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை
சேலம் அருகே பழிக்கு பழியாக இளைஞர் ஒருவரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் நண்பர் சரவணன் ஆகிய இருவரும் தனது கூட்டாளிகளுடன் கடந்த 2019 ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகளை மேட்டூரில் கரைக்க சென்றனர். அப்போது நாழிக்கல்பட்டி பட்டியைச் சேர்ந்த திலிப்குமார் கோஷ்டியினரும் சிலைகளை கரைக்க சென்றனர். அப்போது அங்கே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் திலிப் குமார் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு மற்றும் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த திருநாவுக்கரசு ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து சேலம் அயோதியொப்பட்டினத்தில் குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திருநாவுக்கரசின் மாமனாரை சபரி மலைக்கு வழியனுப்புவதற்காக நேற்று இரவு நாழிக்கல்கல்பட்டி வந்ததாக தெரிகிறது.
திருநாவுக்கரசு சரவணனும் நாழிக்கல்பட்டி வந்ததை அறிந்த திலிப் குமார் தரப்பை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கோயிலுக்கு சென்று நாழிக்கல்பட்டி புறவழிசாலையில் வந்து கொண்டிருந்த திருநாவுக்கரசு மற்றும் சரவணனை அரிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் திருநாவுக்கரசு, சரவணன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் திருநாவுக்கரசு உயிரிழந்தார். நண்பர் சரவணன் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள திலிப்குமாரின் நண்பர்களான சிவா, கௌதம், அஜீத் குமார், அழகுமணி விக்னேஷ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றார்.
இதையடுத்து உயிரிழந்த திருநாவுக்கரசின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. பழிக்குப்பழியாக சேலத்தில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.