சேலம் தங்கும் விடுதியில் ராக்கிங்: ஆட்சியரிடம் மாணவிகள் புகார் மனு
சேலத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் ராக்கிங் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலாமாண்டு மாணவிகள் ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.;
சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்கள் விடுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கியிருந்து மாநகரின் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் விடுதியில் தங்கியுள்ள மூன்றாம் ஆண்டு மாணவிகள் சிலர் முதலாமாண்டு மாணவிகளை தினந்தோறும் ராக்கிங் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
நாள்தோறும் இரவு நேரத்தில் பாட்டு பாட சொல்லியும், நடனம் ஆடச் சொல்லியும் துன்புறுத்துவதால் சம்மந்தப்பட்ட மாணவிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, இனிமேல் ராக்கிங் போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.