கோவில் இடத்தை நில அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்து மக்கள் மறியல்
சேலத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தை நில அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் திருவகவுண்டனூர் அருகே உள்ள வேடிகவுண்டர் காலனி பகுதியில், சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 3.5 ஏக்கர் நிலத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதி கோவில் நிலத்தை மீட்க திருக்கோவில் தர்மகர்த்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி, நில அளவீடு செய்ய சென்ற மண்டல துணை வட்டாட்சியர் கீர்த்தி வாசன், சேலம் மேற்கு தாசில்தார் தமிழரசி மற்றும் நில அளவை அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அப்பகுதிக்கு சென்றனர். அப்போது பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை மீட்க வலியுறுத்தி, இந்து முன்னணியினர் அங்கு வந்ததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து, நில அளவீடு செய்யும் பணியை தற்காலிகமாக கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.