சேலம் மாநகரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாகனங்களை நிறுத்தி போராட்டம்

சேலம் மாநகரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-10 07:45 GMT

சேலம் மாநகரின் சாலையில் 10 நிமிடங்களுக்கு வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ, ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர்.

நாடு முழுவதும் பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட  வரிகளை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் தழுவிய வாகன நிறுத்த போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சேலம் மாநகரில் உள்ள புதிய பேருந்து நிலையம், ஐந்துரோடு, அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் வாகனங்களை சாலையில் இயங்க விடாமல் நிறுத்தி 10 நிமிடங்களுக்கு வாகனங்கள் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உடனே குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனால் சேலம் மாநகர பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

Tags:    

Similar News