மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
குத்தகை பணத்தை திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு.;
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஜீவா என்கின்ற பெரியசாமி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தவர், பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறும்போது, தான் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும், அம்மாபேட்டை பகுதியில் ராஜு என்பவரின் சொந்தமான வீட்டில் ஐந்து லட்சத்தை முன்பணமாக கொடுத்து குத்தகைக்கு வீட்டில் வசித்து வரும் நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யச் சொல்லி தெரிவித்தார். அப்போது நான் அளித்த முன்பணமாக 5 லட்சத்தை தந்தவுடன் வீட்டை காலி செய்வதாக கூறிய பொழுது வீட்டின் உரிமையாளர் ராஜு அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வெளியேற்ற முயன்றார்.
இதுகுறித்து வீராணம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகின்றனர். ஒய்வுபெற்ற நிலையில் பணம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் தவித்த நிலையில் வேறு வழியில்லை என பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.