சேலம் சாலையில் ஒரு கி.மீ. தூரம் தேங்கிய மழைநீர்: கடும் சிரமத்தில் வாகன ஓட்டிகள்
சேலம் இளம்பிள்ளை பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வாக உள்ள குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து கொண்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சேலம் சிவதாபுரம், இளம்பிள்ளை பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் சாலையை சூழ்ந்து நிற்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சிவதாபுரம் பகுதியிலுள்ள எம்ஜிஆர்நகர், அம்மன்நகர், முத்து நாயக்கர் காலனி,இந்திரா நகர் , பழைய சந்தை பகுதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மற்றும் முக்கிய சாலைகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது.
சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் மழை நீரை வெளியேற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிவதாபுரம் மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது.