சேலம் இளம்பிள்ளை பிரதான சாலையில் 2ம் நாளாக ஒரு கி.மீ. தூரம் சூழ்ந்த மழைநீர்
சேலம் இளம்பிள்ளை பிரதான சாலையில் இரண்டாவது நாளாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்து நிற்கும் மழைநீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் தாழ்வான உள்ள குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து கொண்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 540 மில்லி மீட்டர் அளவிற்கு மழையளவு பதிவாகியது.
குறிப்பாக சேலம் - சிவதாபுரம் இளம்பிள்ளை பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக மழைநீர் சாலையை சூழ்ந்து நிற்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எம்ஜிஆர் நகர், அம்மன்நகர், காலனி, இந்திரா நகர், பழைய சந்தை பகுதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் முக்கிய சாலைகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது.
குறிப்பாக சேலத்தாம்பட்டி ஏரி ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் ஏரியில் தேக்க முடியாத சூழ்நிலையால் மழைநீர் சாலையில் சூழ்ந்து கொள்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.