நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் சஸ்பெண்ட்
சேலம் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் அலுவலக உதவியாளர் நீதிபதியை கத்தியால் குத்தியது தெரிய வந்தது;
சேலம் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நான்காவது நீதிமன்ற நீதிபதியாக பொன்பாண்டி பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல நீதிமன்றத்திற்கு வந்த நீதிபதி பொன்பாண்டியிடம், அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் நேராகச் சென்று தன்னை பணி மாறுதல் செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டாராம்.
அப்போது நீதிபதிக்கும் அலுவலக உதவியாளருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிபதியை குத்த முயன்றுள்ளார். அப்போது நீதிபதி தடுத்தால் மார்பில் மட்டும் சிறிய கீறல் விழுந்தது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பிரகாஷை பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடனடியாக நீதிபதியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று சேர்த்தனர். அலுவலக உதவியாளர் பிரகாஷ் ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர், சமீபத்தில் சேலம் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.இதனால் ஆத்திரமடைந்த அலுவலக உதவியாளர், நீதிபதியிடம் விளக்கம் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் கத்தியால் குத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் பிரகாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 11 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பிரகாஷை பணியிடைநீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.