சேலம் மாவட்டத்தில் நடமாடும் மருத்துவ முகாம்: ஆட்சியர் தொடங்கி வைப்பு

சேலம் மாவட்டத்தில் மழை கால நடமாடும் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.;

Update: 2021-11-13 08:00 GMT

நடமாடும் மழைக்கால மருத்துவ முகாம் வாகன ஊர்திகளை கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் தொற்று நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் மழையினால் பொதுமக்கள் நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படாதவாறு தேவையான ஒருங்கிணைந்த முன் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளை பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. 

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட மற்ற மாவட்டங்களில் சேர்த்து ஐந்தாயிரம் மருத்துவ முகாம்கள் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டல் முறைப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 249 மழைக்கால நடமாடும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

அதுமட்டுமல்லாமல் 87 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இதனடிப்படையில் நடமாடும் மழைக்கால மருத்துவ முகாம் வாகன ஊர்திகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 21 நடமாடும் மருத்துவ வாகனங்களும் 42 பள்ளி சிறார் வாகனங்களும், மக்களை தேடி மருத்துவ வாகனங்கள் 20 என மொத்தம் 83 வாகனங்கள் இந்த மருத்துவ முகாமில் ஈடுபடுத்தப்பட உள்ளன. 

இந்த நடமாடும் மருத்துவ முகாம்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் , மருந்தாளுநர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வக உதவியாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல் வயிற்றுப்போக்கு தோல் வியாதி பூச்சி மற்றும் விலங்குகளால் ஏற்படும் நோய்கள், நாய்க்கடி, பாம்புக்கடி, மூச்சுத்திணறல் மஞ்சள்காமாலை, உணவு மற்றும் நீரினால் பரவும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வகை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு மூன்று முகாம் மூலம் 249 மருத்துவ முகாம்கள் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ முகாமில் நடக்கும் இடங்களில் நோயை கண்டறிய சளி மாதிரி தடவல் எடுத்தல், கொரோனா தடுப்பூசி அளித்தல் மற்றும் டெங்கு, சிக்கன்குனியா, லெப்ரசி, டைபாய்டு போன்ற நோய்களை கண்டறிய சில மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது . இந்த முகாமில் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News