பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை: இ.கம்யூ., முத்தரசன்
பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.;
சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி இன்று காலை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அரசு வேலை வாங்கித் தருவதாக நடந்த பண மோசடி விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சருக்கு தெரியாமல் இந்த மோசடி நடந்திருக்காது. எனவே இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு உள்பட சட்டபேரவையில் நிறைவேற்றப்படும் பல தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவது இல்லை; காலம் தாழ்த்தாமல் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். என தெரிவித்தார்.
மேலும், வழக்கத்தை விட நடப்பு ஆண்டு அதிகளவில் மழை பெய்துள்ளது. மழை பாதிப்புகளை முதல்வரும் மத்திய குழுவும் ஆய்வு செய்துள்ள நிலையில் ஆய்வுக்கு பின்னரும் மழை நீடித்து வருவதால் அணைகள் நிரம்பி உபரிநீர் கடலுக்கு அனுப்பும் சூழல் ஏற்பட்டுள்ளதோடு பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி நல்ல முறையில் நடந்தது. அதனை தொடர்ந்து தாளடி பயிர் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்கள் மற்றும் மரங்கள் வீடுகள், கால்நடைகள் என அனைத்திற்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க மீண்டும் புதிதாக கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். தொடர் மழையால் வேலையின்றி தவிப்பவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்வதோடு, வேளாண் பொருட்களுக்கான ஆதார விலை நிர்ணயம் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டார்.