இரும்பாலை எல்லைக்குட்பட்ட இடங்களில் 176 சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
சேலம் இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 176 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.
சேலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகரம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் இரும்பாலை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் 176 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் செயல்பாட்டினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து சிசிடிவி பொறுத்துவதற்கு உறுதுணையாக இருந்த தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மோகன்ராஜ், மாடசாமி, உதவி ஆணையாளர் நாகராஜ் மற்றும் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.