சேலம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சிகிச்சைப் பிரிவு துவக்கம்
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூன்றாம் பாலினத்தினருக்கென தனியாக புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.;
அரசு மருத்துவமனைகளில் ஆண்கள், பெண்களுக்கென புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. எனினும், மூன்றாம் பாலினத்திருக்கென தனியாக சிகிச்சைப் பிரிவுகள் காணப்படுவதில்லை. இந்நிலையில், உடல் சார்ந்த பிரச்சினைகள் கொண்ட மூன்றாம் பாலினத்தினர் ஆண்கள் அல்லது பெண்களுக்கான சிகிச்சைப் பிரிவில் சென்று, தங்களுக்கான பிரச்சினைகளை கூறுவதும், அதற்கான சிகிச்சைகளை பெறுவதும் தயக்கமான சூழலை ஏற்படுத்தும். எனவே, மூன்றாம் பாலினத்தினர் நலன்கருதி, தற்போது அரசு மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவருக்கான தனியாக சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு இன்று தொடங்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி சிறப்பு சிகிச்சை பிரிவினை தொடங்கி வைத்தார். மேலும் வருங்காலத்தில், மூன்றாம் பாலினத்திருக்கான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று டீன் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.