9 மாதத்தில் யாரும் செய்யாத வரலாற்று சாதனை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

9 மாத காலத்தில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனையை தமிழக முதல்வர் செய்து காட்டியிருக்கிறார் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-09 06:30 GMT

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சேலத்தில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,  திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்தை கடைபிடித்து,  சேலத்தில் தங்கள் கட்சியை சார்ந்த சாரதாதேவிக்கு துணை மேயர் பதவியை வழங்கியுள்ளார்.

ஒரு சில இடங்களில் குழப்பம் நடந்து இருந்தாலும்,  அங்கு போட்டி வேட்பாளராக வெற்றி பெற்றவர்களை விலக்கி விட்டு, கூட்டணியில் ஒதுக்கீடு செய்தவர்களுக்கு பதவி வழங்கியது ஒரு மிகப்பெரிய அம்சமாகும். முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றும், நான்  ஸ்டாலின் அவர்களின்  மீது பாசமும் அன்பும் கொண்டிருந்தவன்,  ஆனால்  தற்போது அவருடைய நடவடிக்கை அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. 

பதவி ஏற்ற 9 மாதத்தில் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார்.  9 மாதத்தில் இவரைப்போல இவ்வளவு  நல்ல காரியம் செய்தவர்கள் எந்த முதல்வரும்  இல்லை, இவ்வளவு கடுமையாக உழைத்து வருபவர்களும் யாரும் இல்லை,  எனவே இவர் உலக அளவில் மிகச் சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை  நிறைவேற்றி தந்துள்ளார். இன்னும் மீதம் உள்ள வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.  அரசு சார்பில் ஒதுக்கப்படும் வீடுகள் இனி குடும்ப தலைவிகளுக்கு தரப்படும் என்ற அறிவிப்பு நாட்டில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது என பெருமிதம் தெரிவித்தார்.

பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஸ்டாலின் தலைமையில் வெளிவரும்  பட்ஜெட் மகத்தான பட்ஜெட்டாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் நாங்கள் 100% எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறோம்,  தமிழக முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக்கு  நாங்கள் துணையாக இருப்போம் என்றார்.

தொடர்ந்து ஜெயலலிதா இறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ஓபிஎஸ்-க்கு  சம்மன் அனுப்பி இதுவரை  ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் முன் அவர்  ஆஜராகவில்லை. ஒபிஎஸ்,  மனதில் கள்ளம் கபடம் இல்லை என்றால் என்ன நடந்தது என்பதை அவர் ஆணையத்தின் முன்பு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அப்போதைய முதல்வராக பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிச்சாமியும்  இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆட்சியில் தான் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . ஆனால் ஸ்டாலின் அவர்களின் அரசு,  குழந்தைகளுக்கு அநீதி என்றால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது, ஸ்டாலின் அவர்கள் பார்வையில் குற்றவாளிகள் யாரும் தப்பிவிட முடியாது என்றார்.

Tags:    

Similar News