கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட இந்து முன்னணியினர் பேரணி

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சேலத்தில் இந்து முன்னணியினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-10-20 09:30 GMT

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சேலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நகைகளை உருக்கி வங்கிகளில் அடகு வைத்து அந்த வருவாயை கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

முன்னதாக,  இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் வள்ளுவர் சிலை அருகிலிருந்து பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

கோயில்களில் உள்ள நகைகளை உருக்குவதற்கு தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும்,  தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் மூலம் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும்,  இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

எனவே இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News