காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சேலம் மாணவர்களுக்கு அரசு உதவ கோரிக்கை
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சேலம் தனியார் கல்லூரி மாணவ, மாணவிக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 27.12.2021 அன்று துருக்கியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் (ஏ.வி.எஸ் பொறியியல் கல்லூரி) மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஷேக் முஹம்மது அலி 66 எடை பிரிவில் பங்கேற்று மொத்தம் 650 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
அதேபோல் மேலாண்மை துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி இலக்கியா 52 எடை பிரிவில் பங்கேற்று மொத்தம் 347.5 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.
இதனையடுத்து இன்றைய தினம் இந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார், சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் பொன் சடையன், துணைத்தலைவர் துரை ராமச்சந்திரன், கல்லூரி விளையாட்டு பயிற்சியாளர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீரர்கள், இன்னும் சில மாதங்களில் அடுத்த காமன் வெல்த் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் பங்கேற்பதற்காக தன்னை முழுமையாக தயார் படுத்தி வருகிறேன். அந்த போட்டியில் பங்கேற்பதற்கு தமிழக அரசு தங்களுக்கு உதவிட வேண்டும் என்றும், காமன்வெல்த் போட்டியில் பங்கு பெற வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிற்ககாக விளையாடி தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என்று உறுதி அளித்தனர்.