சேலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.7 லட்சம் பறிமுதல்
சேலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி திமுக பிரமுகர் கொண்டு சென்ற ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி., சுகவனத்தின் மருமகன் சுரேஷ் என்பவரின் சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.7 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.