தொடர் கனமழை எதிரொலி: திருமணிமுத்தாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
சேலத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக திருமணிமுத்தாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சேலத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு துவங்கிய கனமழை இடைவிடாமல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. பின்னர் மீண்டும் நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டது.
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 248 மில்லி மீட்டர் அளவிற்கும், குறிப்பாக மாநகர பகுதிகளில் 66 மில்லி மீட்டர் அளவிற்கு அதிகப்படியாக மழையளவு பதிவாகியுள்ளது.
ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக அங்கிருந்து கீழ்நோக்கி வரும் தண்ணீர், ஏரி குளங்கள் நிரம்பி அருகிலுள்ள திருமணிமுத்தாற்றில் கலக்கிறது. இதன் காரணமாக சேலம் வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அணைமேடு பகுதியில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மழைநீர் திருமணிமுத்தாற்றில் அதிகளவில் செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு பார்வையிட்டு வருகின்றனர்.