போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் போதையில் ஓட்டுநர் தீக்குளிப்பு

சேலத்தில் காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்ததால் மதுபோதையில் இருந்த ஓட்டுநர் நடு ரோட்டிலேயே தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-03-13 11:00 GMT

சந்தோஷ்.

சேலம் மாவட்டம், அமானி கொண்டலாம்பட்டியை அடுத்த அரசமரத்து கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று இரவு கொண்டலாம்பட்டி அருகில் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஓட்டுநர் சந்தோஷ் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற சந்தோஷ் சிறிது நேரத்தில் நடு ரோட்டிலேயே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக அலறியடித்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தோசை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 80 சதவிகித தீக்காயங்களுடன் சந்தோஷ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனத்தை பறிமுதல் செய்த காரணத்திற்காக சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News