சேலம் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அமைச்சரிடம் திமுகவினர் விருப்ப மனு
சேலத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட திரளானோர் தங்களது விருப்ப மனுக்களை அமைச்சர் கே.என் நேருவிடம் வழங்கினர்.
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளிலும், கன்னங்குறிச்சி, ஓமலூா், கருப்பூா், காடையாம்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகளிலும் திமுக சாா்பில் போட்டியிட விரும்புவா்கள் இன்று விருப்ப மனு அளிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சேலம் கலைஞர் மாளிகையில் விருப்ப மனு விநியோகம் இன்று காலை முதலே துவங்கியது. இதில் திரளான கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு அதனை பூர்த்தி செய்து மாலையில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவிடம் தங்களது விருப்ப மனுக்களை வழங்கினர்.
இதில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது ஒருவரையொருவர் முந்தியடித்து கொண்டு விருப்ப மனுக்களை வழங்க அமைச்சரை சூழ்ந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.