பச்சோந்தியை விட அடிக்கடி மாறும் ஒரே கட்சி திமுகதான்: எடப்பாடி பழனிசாமி பதிலடி

நீட் தேர்வு குறித்த துரைமுருகன் பேச்சுக்கு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.;

Update: 2022-02-06 14:00 GMT

 சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அம்மாபேட்டையில் இன்று நடைபெற்றது.

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அம்மாபேட்டையில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுகதான், ஆகையால்தான் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அதிமுகவால் நிறைவேற்ற முடிந்தது என்ற அவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை தொடர்ந்து எதிரிகள் மூக்கு மேல் விரலை வைக்கும் வகையில் தான் முதல்வராக பணியாற்றியதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளதால் அதிமுக வேட்பாளர்கள் நெஞ்சை நிமிர்த்தி மக்களிடம் வாக்குகளை கேட்கலாம் என்றார். 

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் என திமுகவினர் கூறியது, அதிமுகவை அழைத்து பேசினால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்பது தற்போதுதான் தெரிவதாக பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழைத்துப் பேசி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியா சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை பெற்றனர். தற்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அதிமுக வரவில்லை என அமைச்சர் துரைமுருகன் அதிமுக மீது குறை கூறுவது சரியல்ல என சாடிய அவர் பச்சோந்தியை விட அடிக்கடி மாறும் ஒரே கட்சி திமுகதான் என்றார். 

மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய பல்வேறு திட்டப் பணிகளை பட்டியலிட்டு பேசிய அவர் இதனை வேட்பாளர்கள் அனைவரும் அனைத்து வாக்காளர்களுக்கு கொண்டுசென்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பிரபு மணிகண்டன் மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர் துரை சேவுகன் ஆகியோர் 50க்கும் மேற்பட்டோருடன் அக்கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Tags:    

Similar News