கொரோனா 3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர் கார்மேகம்

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-08 13:30 GMT

சேலம் தொங்கும் பூங்காவில் உள்ள பல்நோக்கு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையத்தை ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

சேலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 500 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கோவிட் சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சேலம் தொங்கும் பூங்காவில் உள்ள பல்நோக்கு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொற்று மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக இனிவரும் காலங்களில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இனி நடைபெறாது. புகார் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு புகார் பெட்டியில் வைக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தனி குழுக்கள் மூலமாக சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News