சேலத்தில் தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி கடைகளில் குவிந்த கூட்டம்

சேலத்தில் தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகளை வாங்குவதற்காக ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-10-24 13:30 GMT

சேலம் 4 ரோடு பகுதியில் குவிந்த மக்கள் கூட்டம்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் சேலம் மாநகர பகுதியில் உள்ள சின்னகடை வீதி, முதல் அக்ரஹாரம் மற்றும் நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகள் செயல்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகைக்காகப் புத்தாடைகள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பத்துடன் புத்தாடைகள் வாங்கி வருகின்றனர். 4 ரோடு பகுதியில் உள்ள பிரபல துணிக்கடைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் புத்தாடைகள் வாங்க குவிந்ததால் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றது. அதிகளவில் கூட்டம் இருப்பதால் காவலர்களும் போக்குவரத்தைச் சரி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர் .

அதேபோல சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்ன கடைவீதி மற்றும் முதல் அக்ரஹாரம் பகுதிகளில் சாலையோர துணிக்கடைகள் பெருகிவிட்ட காரணத்தால் அந்த பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தள்ளுவண்டி, இருசக்கர வாகனங்களில் புத்தாடைகளை சுமந்து கொண்டும் வியாபாரிகள் பரபரப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

குடும்பம் குடும்பமாகச் சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புத்தாடைகளை வாங்க குவிந்து வருவதால் காவலர்கள் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ளவும் அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வருகின்றனர். மேலும் சேலம் மாநகரின் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News