சேலத்தில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி: தனியார் பள்ளி மூடல்
சேலத்தில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் செயல்படத் துவங்கியது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் பள்ளி பயிலும் மாணவிகளுக்கு அடுத்தடுத்து தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சேலம் அயோத்தியபட்டினம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அழகாபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மேலும் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பயின்ற வகுப்பு மட்டும் தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டு உடன் பயின்ற மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று சேலம் அழகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மற்றொரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்காலிகமாக பள்ளியை மூடி, உடன் பயின்ற சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளது.
கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை பள்ளி திறக்கமாட்டாது என்று பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் கொடுத்ததை அடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு நேரடியாக வந்து தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.